புத்ராஜெயா, ஜூன் 8- நபிகள் நாயகம் குறித்து இந்திய அரசியல்வாதிகள் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கு மலேசியா தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
அச்சம்பவம் தொடர்பில் தனது வலுவான கண்டனத்தைத் தெரிவிப்பதற்காக மலேசியாவுக்கான இந்தியத் தூதரை கடந்த செவ்வாய்க்கிழமை தாங்கள் அழைத்ததாக வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) கூறியது.
முஸ்லீம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு சினமூட்டும் வகையில் கருத்துகளை வெளியிட்ட தலைவர்கள் இருவரை நீக்கும் ஆளும் கட்சியின் முடிவை மலேசியா வரவேற்பதாக விஸ்மா புத்ரா அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அமைதி மற்றும் நிலைத்தன்மையைக் கருதி இஸ்லாம்போஃபியா எனப்படும் இஸ்லாமியர்களுக்கு எதிரான அச்ச உணர்வை அகற்றுவதிலும் சினமூட்டும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும் ஒன்றுபட்டு செயல்பட வருமாறு இந்தியாவை மலேசியா கேட்டுக் கொண்டது.
இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதாக கட்சியின் இரு தலைவர்கள் வெளியிட்ட அந்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நாடுகள் வரிசையில் மலேசியாவும் இணைந்துள்ளது.
தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பான விவாத நிகழ்வொன்றில் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட இரு தலைவர்கள் பாரதீய ஜனதா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் இந்தியா மன்னிப்பு கோர வேண்டும் என்று கட்டார் வலியுறுத்தியுள்ளது.


