புத்ரா ஜெயா, ஜூன் 8- உணவு உத்தரவாத நிதித் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு உதவ அரசாங்கம் 15 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
உயர் தொழில்நுட்பத் திறன் கொண்ட மீன்பிடி படகுகளை வாங்குவதன் மூலம் மீனவர்களை உட்படுத்திய உருமாற்றுத் திட்டத்தை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கப்படுவதாக மீன்வளத் துறை அறிக்கை ஒன்றில் கூறியது.
நவீனமய மீன்பிடி படகுத் திட்டத்தின் கீழ் கடலோர மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு இத்திட்டம் துணை புரியும். மேலும் ஏ மற்றும் பி மண்டலங்களில் மீன்பிடி முறையை நவீனப்படுத்தவும் இயலும் என்று அத்துறை தெரிவித்தது.
தற்போது ஏ மற்றும் பி மண்டலங்களில் பாரம்பரிய முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த உதவித்திட்டம் விரிவான வாய்ப்புகளை உருவாக்கும்.
இது தவிர, இத்திட்டத்தின் மூலம் பாதுகாப்பு அம்சங்கள் வலுப்படுத்தப்பட்டு ஏ மற்றும் பி மண்டலங்களில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தரமான அதிக மீன்களை பிடிப்பதற்குரிய சூழல் உருவாகும் என அத்துறை மேலும் கூறியது.
உலக கடல் தினத்தை முன்னிட்டு இன்று இங்கு வெளியிட்ட அந்த அறிக்கையில் மீன்வளத் துறை இவ்வாறு குறிப்பிட்டது.


