ஷா ஆலம், ஜூன் 8- நிர்ணயிக்கப்பட்ட தொலைநோக்கு திட்டம் மற்றும் பணி இலக்கை அடைவதை உறுதி செய்ய சிலாங்கூர் பொது சுகாதார ஆலோசக மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவர்.
இந்த மன்றத்தின் உருவாக்கத்திற்கு மாநில அரசு பெருந்தொகையை செலவிட்டுள்ளதானது பொது சுகாதாரம் மீது அது கொண்டுள்ள அக்கறையைப் புலப்படுத்துவதாக உள்ளது என்று அந்த ஆலோசக குழுவின் உறுப்பினரான டாக்டர் முகமது ஃபர்ஹான் ரோஸ்லி கூறினார்.
பொது சுகாதாரத் திட்டங்கள் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். சுகாதாரம் தொடர்புடைய விவகாரங்களில் ஏற்படக்கூடிய பிரச்னைகளை விவாதித்து, மதிப்பீடு செய்து தீர்வுக்கான வழிகளை ஆராய்வோம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த குழுவின் மூலம் கிடைக்கும் பலன்களை ஓரிரு மாதங்களில் காணமுடியாது. அதற்காக 10 அல்லது 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டி வரலாம். ஆகவேதான் மாநில அரசு மக்களின் சுகாதாரத்தை முன்னிறுத்தி பெருந்தொகையை இத்திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளது என்றார் அவர்.
நேற்று இங்குள்ள மாநில அரசு தலைமையகத்தில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசக மன்றத்தின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


