ஷா ஆலம், ஜூன் 8- இவ்வாண்டில் புக்கிட் மெலாவத்தி தொகுதியில் 12 சாலைகளை சீரமைக்க 13 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சாலை சீரமைப்புத் திட்டம் மாரிஸ் எனப்படும் மலேசிய நெடுஞ்சாலை தரவு தகவல் முறை நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.
இப்பகுதியிலுள்ள சில சாலைகள் மோசமான நிலையில் இருப்பது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து நாங்கள் தொடர்ந்து புகார்களைப் பெற்று வந்தோம். இச்சாலைகளைப் சீரமைக்காவிட்டால் வாகனமோட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்தது.
ஆகவே, பொது மக்களின் பாதுகாப்பு கருதி புக்கிட் மெலாவத்தி தொகுதிக்கான மாரிஸ் நிதியைப் பயன்படுத்தி இச்சாலைகளை சீரமைக்க நாங்கள் முடிவு செய்தோம் என்று சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.
இந்த சாலைகளை சீரமைக்கும் பணி கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவர், இதுவரை ஐந்து சாலைகள் சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளன என்றார்.


