ஷா ஆலம், ஜூன் 7- தானியச் சோள பயிரீட்டுத் திட்டத்திற்காக கோல லங்காட் செலத்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியைப் பயன்படுத்தும் போது அதன் நிலத் தகுதியை மாற்ற வேண்டிய அவசியமில்லை.
கால்நடைத் தீவன இறக்குமதியைக் குறைத்து மாநிலத்தில் நிலவும் கோழிப் பற்றாக்குறைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதை அத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கோழி விநியோகம் மற்றும் கால் நடைத் தீவினப் பற்றாக்குறைப் பிரச்னைக்குத் தீர்வு காண நாம் விரும்புகிறோம் என்று அவர் சொன்னார்.
இந்நோக்கத்தின் அடிப்படையில் சிலாங்கூர் அரசு முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. மற்ற மாநிலங்கள் இப்பிரச்னைக்குத் தீர்வு காண எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ள அந்த வனத்தை சோளப் பயிரீட்டுத் திட்டத்திற்காக மாநில அரசு துப்புரவு செய்வதை தாங்கள் ஆட்சேபிப்பதாக அரசு சாரா அமைப்பொன்று கூறியிருந்தது தொடர்பில் அமிருடின் இவ்வாறு கருத்துரைத்தார்.
சுமார் 30 லட்சம் வெள்ளி செலவில் தானியச் சோள பயிரீட்டுத் திட்டத்தை மேற்கொள்வது தொடர்பில் சிலாங்கூரும் நெகிரி செம்பிலான் மாநிலமும் கடந்த மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.


