ஷா ஆலம், ஜூன் 7- தலைநகர், பங்சாரிலுள்ள பேரங்காடி கார் நிறுத்துமிடத்தில் கடந்த மாதம் 31 ஆம் தேதி பிற்பகல் 2.00 மணியளவில் சிலாங்கூர் மாநில போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் உள்நாட்டினர் மூவர் கைது செய்யப்பட்டதோடு 145 பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டது.
நாட்டின் வடபகுதியிலுள்ள அண்டை நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட அந்த போதைப் பொருளை 23 முதல் 49 வயது வரையிலான அம்மூவரும் புரோட்டோன் ப்ரீவ் காரில் ஏற்ற முயன்ற போது தயார் நிலையில் இருந்த போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்ததாக சிலாங்கூர் மாநில போதைப் பொருள் தடுப்பு பிரிவின் தலைவர் ஏசிபி அகமது ஜெப்ரி அப்துல்லா கூறினார்.
சுமார் 355,350 வெள்ளி மதிப்புள்ள 142.1 கிலோ எடையுள்ள அந்த கஞ்சா தங்க நிறத் தாளில் பொட்டலமிடப்பட்டிருந்தது. உயர் ரகத்தைச் சேர்ந்தது என நம்பப்படும் இந்த கஞ்சா கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் விநியோகிக்கப்படவிருந்தது என்று இங்கு இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
போதைப் பொருள் மற்றும் கிரிமினல் புகார்கள் தொடர்பான குற்றப் பின்னணியைக் கொண்ட அந்த மூவரும் கடந்த நான்கு மாதங்களாக இந்த போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் அம்பலமானது என்றார் அவர்.
அம்மூவரும் போதைப் பழக்கம் உள்ளவர்கள் என்பது சோதனையில் தெரியவந்ததாக கூறிய அவர், அக்கும்பலிடமிருந்து 138,000 வெள்ளி மதிப்புள்ள மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.
கைதான மூவரும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 117 வது பிரிவின் கீழ் விசாரணைக்காக ஜூன் 1 முதல் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவம் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.


