ஷா ஆலம், ஜூன் 7- இம்மாதம் 4 ஆம் தேதி வரையிலான 22வது நோய்த் தொற்று வாரத்தில் நாட்டில் கை,கால்,வாய்ப்புண் நோய்ப் பரவல் 32 மடங்கு அதிகரித்து 82,846 சம்பவங்களாகப் பதிவாகியுள்ளது.
கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,485 ஆக மட்டுமே இருந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலுக்கு முன்னர் இதே காலக்கட்டத்தில் இந்நோய்ச் சம்பவங்களின் எண்ணிக்கை 30,489 ஆக இருந்ததாக கூறிய அவர், இவ்வாண்டின் அதே காலக் கட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 1.7 மடங்கு அதிகமாகும் என்றார்.
இருப்பத்திரண்டாவது நோய்த் தொற்று வாரத்தில் மட்டும் 16,954 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டனர். 21வது நோய்த் தொற்று வாரத்தில் பதிவான 18,688 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது 9.3 விழுக்காடு குறைவாகும் என்று அவர் தெரிவித்தார்.
இக்காலக்கட்டத்தில் சிலாங்கூர் மாநிலம் 23,305 சம்பவங்களுடன் முதலிடம் வகிக்கிறது. கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா, பேராக், கிளந்தான், ஜோகூர் ஆகிய மாநிலங்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் அதாவது 90 விழுக்காட்டினர் ( 78,841 பேர்) 6 வயதுக்கும் குறைவான சிறார்களாவர். 7 முதல் 12 வயது வரையிலானோரில் 6,520 பேரும் 12 வயதுக்கும் மேற்பட்டோரில் 1,485 பேரும் இந்நோய்க்கு இலக்காகியுள்ளனர் என்றார் அவர்.


