சைபர்ஜெயா, ஜூன் 7- குறைந்த வருமானம் பெறுவோர் சொந்த வீடு பெறுவதற்கு உதவும் நோக்கில் வீடமைப்பு அறவாரியம் ஒன்றை உருவாக்க சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (பி.கே.என்.எஸ்.) திட்டமிட்டுள்ளது.
கொள்முதல் செய்யப்படும் வீட்டின் விலையில் ஒரு பகுதியை அந்த அறவாரியம் ஏற்றுக் கொள்ளும் என்பதோடு அந்த வீட்டின் உரிமையில் 50 விழுக்காட்டையும் அது தன்வசம் கொண்டிருக்கும் என்று பி.கே.என்.எஸ். தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ முகமது அப்பாஸ் கூறினார்.
உதாரணத்திற்கு, ஒரு வீட்டின் விலை 300,000 வெள்ளியாக இருந்து வங்கி 150,000 வெள்ளி கடனை மட்டுமே தர முன்வரும் பட்சத்தில் எஞ்சிய 150,000 வெள்ளியை பி.கே.என்.எஸ். வழங்கி அவ்வீட்டின் 50 விழுக்காட்டு உரிமையை தன் வசம் வைத்துக் கொள்ளும் என்று அவர் விளக்கினார்.
இன்று இங்குள்ள சிலாங்கூர் சைபர் வேலியில் ரெஸிடன்சி இடாமான் சிலாங்கூர் கூ பி.கே.என்.எஸ். வீடுகளுக்கான சாவியை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
அந்த அறவாரியத் திட்டம் இங்கிலாந்தில் அமல்படுத்தப்படுவதாக கூறிய அவர், இந்த வீடமைப்பு அறவாரியம் தொடர்பான சட்ட நெளிவு சுழிவுகளை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக பி.கே.என்.எஸ். தனது பணியாளர்களை அந்நாட்டிற்கு அனுப்பும் என்றார்.
இந்த பரிந்துரை இன்னும் பி.கே.என்.எஸ். நிலையிலே உள்ளது. அது இன்னும் இயக்குநர் வாரியத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த பரிந்துரை இறுதி செய்யப்பட்டவுடன் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக மாநில அரசின் கவனத்திற்கு இதனைக் கொண்டுச் செல்வோம் என்று அவர் தெரிவித்தார்.


