ஷா ஆலம், ஜூன் 7: சுங்கை லங்காட்டின் கரையில் கான்கிரீட் தடுப்பு அணைகள் அமைப்பதன் மூலம் ஜாலான் ரெகோ, காஜாங்கைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஏற்படும் திடீர் வெள்ள அபாயத்தைத் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RM12 லட்சம் ஒதுக்கீட்டில் தாமான் ஸ்ரீ லங்காட், தாமான் மாகோத்தா, தாமான் பாசிர் மாஸ் மற்றும் தாமான் பாங்கி ஆகிய நான்கு பகுதிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது என்று சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
காஜாங் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஹீ லாய் சியான் கருத்துப்படி, மூன்று பகுதிகளில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன, அதே நேரத்தில் தாமான் பாங்கியில் உள்ள திட்டம் இம்மாத நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“சுங்கை லங்காட்டில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், ஜாலான் ரெகோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க, தாமான் ஸ்ரீ லங்காட், தாமான் மாகோத்தா, தாமான் பாசிர் மாஸ் மற்றும் தாமான் பாங்கி ஆகிய நான்கு பகுதிகளில் அணைகளைக் கட்டினோம்.
"மாநில அரசின் ஒதுக்கீட்டில் இருந்து RM350,000 செலவில் தாமான் பாங்கியில் நான்காவது திட்டம் ஜூன் 15 ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.


