கோலாலம்பூர், ஜூன் 7- நவீனமய அலையில் இளம் தலைமுறையினர் தங்கள் சுய அடையாளத்தை இழக்காதிருப்பதை உறுதி செய்ய தெளிவான இலக்கை அரசாங்கம் வகுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இளையோர் மத்தியில் பள்ளிப் பருவம் தொடங்கி உயர்மதிப்புக் கூறுகள் புகுத்தப்பட வேண்டும் தேசிய இலக்கியவாதி டத்தோ உஸ்மான் அவாங்கின் புதல்வி ஹஸ்லினா கூறினார்.
சமுதாயத்திற்கான இலக்கை அரசாங்கம் நிர்ணயிப்பது முக்கியமானதாகும். பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் பயிற்றுவிப்பது என்பது போதுமானதாக இருக்காது என்று அவர் சொன்னார்.
பள்ளிப் படிப்பு என்பது மிகவும் அத்தியாவசியமானது. உயர்மதிப்புக் கூறுகளை புகுத்தக் கூடிய இலக்கினை புதிய தலைமுறையினருக்கு அரசாங்கம் கொண்டு வருவது அவசியம் என்றார் அவர்.
கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழாவில் உள்ள சிலாங்கூர் பெவிலியனில் நேற்று நடைபெற்ற இலக்கிய நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அனைத்துலக புத்தக விழாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலாங்கூர் பெவிலியனில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுவதற்குரிய வாய்ப்பினை இலக்கியவாதிகளுக்கு மாநில அரசு வழங்கியுள்ளது.


