கோலாலம்பூர், ஜூன் 7- தொற்றா நோய்களுக்கு எதிரான விழிப்புணர்வு பொது மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனினும், ஆஸ்துமா நோயைப் பொறுத்த வரை உடனடி சிகிச்சை தேவைப்படாத சாதாரண நோய் என்ற தவறான கருத்து பலரது மத்தியில் நிலவி வருகிறது.
விரைந்து கட்டுப்படுத்தப்படாத மற்றும் உடனடி சிகிச்சைப் பெறப்படாத ஆஸ்துமா நோய் மரணத்திற்கு இட்டுச் செல்லும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
நாட்டில் சுமார் இருபது லட்சம் பேர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 90 விழுக்காட்டினர் உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு குறைவான ஆயுளைக் கொண்டிருக்கின்றனர்.
ஆஸ்துமா நோயின் காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து நான்கு இலக்கங்களை எட்டிவிட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்நோயினால் 1,700 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதர நோய்களால் மரணமடைவோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் ஆஸ்துமா நோய் தொடர்புடைய மரண எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். எனினும், முன்கூட்டியே முறையான சிகிச்சையைப் பெறும் பட்சத்தில் இந்நோயினால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்துமா நோய் காரணமாக ஏற்படக்கூடிய அவசியமற்ற மரணங்களைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக நோய்த் நடுப்பு நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படவேண்டும் என்பது மருத்துவ நிபுணர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


