ஷா ஆலம், ஜூன் 7- மலேசிய ஆயுதப்படை (ஏ.டி.எம்.) வீரர்களின் நலனில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி பாதுகாப்பு அமைச்சரை வலியுறுத்திய அவர், நாட்டுக்காக நிறைய அர்ப்பணிப்புகளைப் புரிந்திருக்கும் முன்னாள் வீரர்களின் பிரச்னையை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி பலமுறை நாடாளுமன்றத்திற்குக் கொண்டுச் சென்றுள்ளதாக கூறினார்.
கோலாலம்பூரில் உள்ள வீரர்கள் நினைவுச் சின்னத்தில் முன்னாள் இராணுவ வீரர்கள் பேரணியை நடத்தியதானது, அவர்களின் உரிமைகளைக் காப்பதில் தற்காப்பு அமைச்சு உரிய கவனம் செலுத்தாததை புலப்படுத்துவதாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நமது நாட்டிற்காக அரும் சேவைகளைப் புரிந்த இராணுவ வீரர்களின் குரலை புறக்கணிக்காதீர்கள் என தனது முகநூல் பதிவில் கெஅடிலான் கட்சியின் தலைவருமான அவர் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியப் பிரச்னைக்கு சரியான வழிகளில் தீர்வு காண எட்டு ஆண்டுகளாகத் தாங்கள் நடத்திய போராட்டம் எந்தப் பலனையும் அளிக்காத நிலையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் அடங்கிய குழு தேசிய நினைவுச் சின்னத்தில் நேற்று அமைதியான முறையில் பேரணி நடத்தியது.
ஓய்வூதிய முறையில் சீர்திருத்தம், ஓய்வூதியம் பெறாத படைவீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல், ஏ.டி.எம். வீரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான வாய்ப்பு ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்தப் பேரணியை நடத்தினர்.
நாங்கள் அரசியலுக்கு சம்பந்தமில்லாத குழுவினர். சுமார் 330,000 படைவீரர்களுக்கு இன்னும் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மேலும் அந்த எண்ணிக்கையில் சுமார் 135,000 பேருக்கு ஓய்வூதியம் இல்லை என்று ஓய்வு பெற்ற அரச மலேசிய ஆகாயப் படையின் மேஜர் ரோஸ்லி மேர் முகமது ஜாஃபர் கூறினார்.
இப்பேரணியில் நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.


