கோலாலம்பூர், ஜூன் 7 - கோலாலம்பூர் அனைத்துலக புத்தகத் விழாவில், டாருல் ஏசான் புத்தகத் திட்டத்தின் கீழ் (ஐ.பி.டி.இ.) மொழிபெயர்க்கப்பட்ட இரண்டு வெளிநாட்டு புத்தகங்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று வெளியிட்டார்.
'மாஹ்லிகை இம்பியான்' என்ற தலைப்பிலான முதல் புத்தகம் 1988 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற நகுயிப் மஹ்ஃபூஸ் என்பவரால் எழுதப்பட்டது, இரண்டாவது புத்தகம் எகிப்திய அமைச்சர் மற்றும் கலாசாரவாதி முகமது ஹுசைன் ஹைகால் என்பவரால் எழுதப்பட்டதாகும்.
மாநில அரசினால் வெளியிடப்படும் 40 புத்தகங்களில் இந்த இரண்டு மொழிபெயர்ப்புப் புத்தகங்களும் அடங்கும் என்று 'சிலாங்கூர் மந்திரி புசாருடன் ஒரு மாலை' நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் அமிருடின் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், சொந்த மின் உபகரணம் இல்லாத மாணவர்களுக்கு உதவும் நோக்கிலான செபிந்தாஸ் எனப்படும் சிலாங்கூர் அடிப்படை தொழில்நுட்பக் கடனுதவித் திட்டத்தையும் அமிருடின் அறிமுகப்படுத்தினார்.
தி ஸ்மார்ட் செல் மற்றும் சிலாங்கூர் பொது நூலகக் கழகத்துடன் இணைந்து கடந்த ஆண்டு நவம்பரில் மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட செபிந்தாஸ் திட்டத்தின் கீழ் மொத்தம் 50 குடும்பங்கள் உதவி பெற்றுள்ளன.


