கோலாலம்பூர், ஜூன் 7- உலகம் தற்போது பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் உணவு பாதுகாப்பு நெருக்கடிக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா வலியுறுத்தியுள்ளார்.
உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு நீண்ட காலத் திட்டங்கள் வரையப்பட வேண்டும் என்பதோடு வாழ்க்கைச் செலவினமும் கட்டுப்பாடான அளவில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என அவர் கூறினார்.
எனது குடிமக்களில் சிலர் உணவு மூலப்பொருள் விலையேற்றத்தால் எதிர்நோக்கும் பிரச்னை உள்ளிட்ட வாழ்வியல் பிரச்னைகளுக்கு எனது அரசாங்கமும் அனைத்து நிலையிலான அரசாங்கத் தலைவர்களும் தீர்வு காண்பார்கள் என நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.
உணவு பாதுகாப்பு நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு பிரச்னைகளை நாடு எதிர்நோக்கும் ஒவ்வொரு முறையும் சர்ச்சைகளுக்கு வித்திட வேண்டாம் என்பது எனது அறிவுரையாகும். மக்கள் நலன் காக்கப்படுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
பிரச்னைகள் ஏற்படும் போது ஒருவரை ஒருவர் குறை சொல்வது பல்வேறு சவால்களை எதிர்நோக்கியிருக்கும் எனது மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் எந்த வகையிலும் உதவாது என்றும் அவர் சொன்னார்.
தனது அதிகாரப்பூர்வ பிறந்த நாளை முன்னிட்டு இங்குள்ள இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற விருதுகள் மற்றும் பட்டங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.


