சிரம்பான், ஜூன் 6- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 243.3வது கிலோ மீட்டரின் தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தில் நேற்று நிகழ்ந்த ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து தொடர்பில் கஞ்சா போதையில் வாகனம் ஓட்டியவர் என நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புரோடுவா மைவி ரக காரை ஓட்டிய 28 வயதுடைய அந்த நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நந்தா மாரோப் கூறினார்.
கைது செய்யப்பட்ட போது அந்நபர் போதையின் காரணமாக பரவச நிலையில் இருந்தார். அவர் ஓட்டிய காரை சோதனையிட்ட போது 3.39 கிராம் எடையுள்ள கஞ்சா என நம்பப்படும் காய்ந்த இலைகள் அடங்கிய பிளாஸ்டிக் பொட்டலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
வேலை இல்லாதவரான அந்த நபர் விசாரணைக்காக இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பில் 1952 ஆம் ஆண்டு போதைப் பொருள் சட்டத்தின் 6 வது பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 15(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு 10.40 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த மைவி ரகக்கார் முன்னால் சென்று கொண்டிருந்த டோயோட்டா அவான்சா காரை மோதியது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்து பல முறை சுழன்ற அவான்சா கார் அச்சாலையில் பயணித்த இரு கார்களை மோதியது. இந்த மோதலின் எதிரொலியாக அந்த அவான்சா காரின் பின்புற சக்கரம் கழன்று எதிர்த்தடத்திதல் பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு காரை மோதியது என்றார் அவர்.
எனினும், இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை எனக் கூறிய அவர், இவ்விபத்து குறித்து 10 எல்.என். 166/69 விதிகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.


