கிள்ளான், ஜூன் 6- செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் மூவினங்களையும் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு கடந்த சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை தாமான் செந்தோசாவிலுள்ள தொகுதி சேவை மையத்தில் நடைபெற்றது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் இந்திய சமூகத்திற்கான மந்திரி புசாரின் சிறப்பு பிரதிநிதியுமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் ஏற்பாட்டில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்வில் செனட்டர் யாக்கோப் சப்ரி, காவல் துறை, கிள்ளான் நகராண்மைக் கழகம், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பள்ளிவாசல் மற்றும் சூராவ் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.
இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் உரையாற்றிய குணராஜ், கெஅடிலான் கட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இந்த பொது உபசரிப்பு சற்று தாமதமாக நடத்தப்படுவதாக கூறினார்.
பல்வேறு இன, மத பின்னணி கொண்ட மலேசியர்கள் மத்தியில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உறுதி செய்வதில் இத்தகைய பொது உபசரிப்பு நிகழ்வில் பெரிதும் துணை புரிகின்றனர் என்றார்.
இந்த பொது உபசரிப்பில் மூவினங்களையும் சேர்ந்த மக்கள் திரளாக கந்து கொண்டது மலேசியர்கள் மத்தியில் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பைக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொது உபசரிப்பை முன்னிட்டு நடத்தப்பட்ட விருந்து நிகழ்வில் ரோஜாக், சாத்தே, கெத்துப்பாட் வறுத்த ஆட்டிறைச்சி உள்பட பல்வேறு வகையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு கலைஞர்களும் காதுக்கினிய பாடல்களைப் பாடி நிகழ்வில் கலந்து கொண்டவர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.


