கோம்பாக், ஜூன் 1- கெஅடிலான் தலைவர்கள் வரும் 15வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற கட்சித் தேர்தலில் உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த பொதுத் தேர்தல் கடந்த 2018 ஆம் ஆண்டுத் தேர்தலை விட சவால்மிக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மக்களிடமிருந்து மறுபடியும் அதிகாரத்தைப் பெறுவதற்கு ஏதுவாக பக்கத்தான் ஹராப்பான் உறுப்புக் கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கடுமையாகப் பாடுபட வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி பெசாருமான அவர் வலியுறுத்தினார்.
நமது இலக்கு தெளிவானது. வரும் பொதுத் தேர்தல் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். கட்சித் தேர்தலில் தோற்றவர்கள் உள்பட அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவர் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
கட்சித் தேர்தலில் தோற்றவர்களும் கட்சியில் செல்வாக்கை கொண்டுள்ளனர். அவர்களுக்கும் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால் ஒன்றாக இணைந்து பணியாற்ற அவர்கள் முன்வர வேண்டும் என அமிருடின் கூறினார்.
நேற்றிரவு இங்கு நடைபெற்ற சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


