கோலாலம்பூர், ஜூன் 1- ஷா ஆலம், ஐ-சிட்டியின் ஒரு வளாகத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின் போது பெண் வேடமிட்ட ஆண்கள் அரை நிர்வாணக் கோலத்தில் நடனமாடியதோடு பட்டாசுகளையும் வெடித்தது தொடர்பில் மேலும் சிலரை காவல் துறையினர் கைது செய்யவுள்ளனர்.
இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர் என நம்பப்படும் சேக் லாலா எனும் நபர் உள்பட சிலரை தாங்கள் கைது செய்துள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.
சம்பந்தப்பட்ட நபர் நேற்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், இச்சம்பவம் தொடர்பில் போலீசார் அனைத்து தகவல்களை திரட்டி வருகிறது. அங்கு நடனமாடியவர்களில் சிலர் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதால் கைது நடவடிக்கை கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூரின் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கும் ஐ-சிட்டியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சோஹோ ஐ-சிட்டி கூட்டு நிர்வாக மன்றத்திடமிருந்து கடந்த சனிக்கிழமை போலீசார் புகாரைப் பெற்றனர்.
குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள ஒரு இடத்தை சே லாலா என்பவர் சுமார் 4,000 வெள்ளிக்கு வாடகைக்கு எடுத்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.


