ஷா ஆலம், மே 31- கடந்த 1995 ஆம் ஆண்டு மலேசியா கிண்ணத்தை வென்ற சிலாங்கூர் குழுவின் ஆட்டக்காரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வெகு விரைவில் சிலாங்கூர் கூ வீடுகள் வழங்கப்படும்.
அக்குழுவினருக்கு நிலம் வழங்கப்படும் என அப்போதைய மாநில அரசு அளித்திருந்த வாக்குறுதிக்கு மாற்றாக சிலாங்கூர் கூ இடாமான்/ஹராப்பான் வீடுகள் வழங்கப்படுவதாக வீடமைப்பு மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
இவ்விவகாரம் தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து அதனை மாநில ஆட்சிக்குழுவிடம் தாம் முன்வைத்ததாக அவர் சொன்னார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் விளையாட்டாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் முன்வைத்த இந்த கோரிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக அவர்களை மாநில அரசு சார்பில் சந்தித்தேன் என அவர் குறிப்பிட்டார்.
நிலத்திற்கு மாற்றாக சிலாங்கூர் கூ வீடுகளை வழங்குவது தொடர்பில் மாநில அரசும் சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியமும் அந்த முன்னாள் விளையாட்டாளர்களுடன் பேச்சு நடத்தின. இந்த பரிந்துரையை அவர்கள் ஏற்றுக் கொண்டனர் என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட விளையாட்டாளர்களுக்கு எந்த இடத்தில் வீடுகள் வழங்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனக் கூறிய அவர், இவ்விவகாரம் மறுபடியும் மாநில ஆட்சிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என்றார்.
சுமார் 11 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் சிலாங்கூர் குழு கடந்த 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற மலேசிய கிண்ண போட்டியில் பகாங் குழுவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று கிண்ணத்தை 28 ஆவது முறையாக கைப்பற்றியது.
அக்குழுவைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 0.4 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று அப்போது வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது.


