ECONOMY

ஓடும் காரில் பிள்ளைகள் சாகசம்- தந்தை வெங்கடாசலபதி  மீது குற்றச்சாட்டு

31 மே 2022, 7:09 AM
ஓடும் காரில் பிள்ளைகள் சாகசம்- தந்தை வெங்கடாசலபதி  மீது குற்றச்சாட்டு

ஈப்போ, மே 31- சாலையில் கார் பயணிக்கும் போது திறந்திருந்த கண்ணாடிகள் வழியே பாதி உடல் வெளியில் தெரியும் வகையில் சாகசம் புரிவதற்கு தனது மூன்று பிள்ளைகளையும் அனுமதித்ததற்காக காரோட்டி ஒருவர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி மாலை 6.20 மணிக்கும் 6.45 மணிக்கும் இடையே ஜாலான் தம்பூனில் இக்குற்றத்தைப் புரிந்ததாக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை அம்மூன்று பிள்ளைகளின் தந்தையான வி. வெங்கடாசலபதி (வயது 37) என்பவர் மறுத்து விசாரணை கோரினார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் 50,000 வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 31(1) பிரிவு ஆகியவற்றின் கீழ் அவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான இவர்களின் சைமன் செல்வராஜ், குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா 15,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதிக்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

எனினும், காப்புறுதி முகவராக பணி புரியும் தனது கட்சிக்காரர் மாதம் 2,000 வெள்ளி மட்டுமே சம்பளம் பெறுவதோடு மனைவி, மூன்று பிள்ளைகள் மற்றும் வயதான பெற்றோர்களை பராமரிக்கும் பொறுப்பையும் கொண்டுள்ளதால்  ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா 2,500 வெள்ளி ஜாமீன் தொகையை நிர்ணயிக்கும்படி வெங்கடாசலபதியின் வழக்கறிஞர் கே. நாதன் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

இவ்விரு குற்றச்சாட்டுகளுக்கும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 9,000 வெள்ளி ஜாமீன் தொகையை நிர்ணயித்த நீதிபதி அய்னுள் ஷாரின் முகமது இவ்வழக்கில் ஆவணங்களை ஒப்படைப்பதற்கு ஏதுவாக வழக்கை ஜூலை முதல் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.