ECONOMY

எச்.ஐ.வி./எய்ட்ஸ் நோயாளிகளில் 90 விழுக்காட்டினர் ஆண்கள்- சுகாதார அமைச்சு தகவல் 

23 மே 2022, 8:39 AM
எச்.ஐ.வி./எய்ட்ஸ் நோயாளிகளில் 90 விழுக்காட்டினர் ஆண்கள்- சுகாதார அமைச்சு தகவல் 

கோல பெராங், மே 23- நாட்டில் எச்.ஐ.வி./எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 90 விழுக்காட்டினர் ஆண்கள் மற்றும் இளம் வயதினர் ஆவர் என்று எச்.ஐ.வி./எய்ட்ஸ் மற்றும் ஹெப்படைடிஸ் சி நோய்ப் பிரிவின் தலைவர் டாக்டர் அனிதா சுலைமான் கூறினார்.

கடந்த 2020 டிசம்பர் வரை நாடு முழுவதும் 125,878 எச்.ஐ.வி./எய்ட்ஸ் நோயாளிகள் அமைச்சிடம் பதிந்து கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் சொன்னார்.

இந்நோயாளிகள் பட்டியலில் ஆண்களே முதலிடம் வகிக்கின்றனர். போதைப் பொருளைக் செலுத்துவதற்கு ஊசியை பகிர்ந்து கொள்வது, பாதுகாப்பற்ற ஆண்,பெண் உறவு மற்றும் ஓரினச் சேர்க்கை போன்றவை இந்நோய்ப் பரவலுக்கு முக்கிய காரணமாக விளங்குவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 1986 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் எச்.ஐ.வி./எய்ட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறார்களின் எண்ணிக்கை 14,213 ஆகும். ஆண்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நோய் பீடித்தவர்களில் 60 விழுக்காட்டினர் 29 முதல் 39 வயது வரையிலான இளம் வயதினர் ஆவர் என்றும் அவர் தெரிவித்தார்.

இங்குள்ள கம்போங் பெலாடானில் உள்ள ரூமா பைத்துல் சக்னா இல்லத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நாட்டில் எச்.ஐ.வி./எய்ட்ஸ் நோயாளிகளின் உண்மையான எண்ணிக்கை அமைச்சிடம் உள்ள தரவுகளைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். இந்நோயாளிகள் மீது சமூகம் கொண்டுள்ள எதிர்மறையான கண்ணோட்டம் காரணமாக பல எச்.ஐ.வி./எய்ட்ஸ் நோயாளிகள் சிகிச்சைப் பெறத் தயக்கம் காட்டுவதே இதற்கு காரணமாகும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.