ECONOMY

ஐவரில் ஒருவர் மட்டுமே உயர் இரத்த அழுத்தத்தை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துகிறார்- டாக்டர் நோர் ஹிஷாம்

19 மே 2022, 3:55 AM
ஐவரில் ஒருவர் மட்டுமே உயர் இரத்த அழுத்தத்தை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துகிறார்- டாக்டர் நோர் ஹிஷாம்

கோலாலம்பூர், மே 19 - ஐந்தில் ஒரு நோயாளியால் மட்டுமே உயர் இரத்த அழுத்தத்தைக்  வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிகிறது என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர்  டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இதனால் 80 சதவீத உயர் இரத்த அழுத்த நோயாளிகள் மாரடைப்பு, பக்கவாதம், சீரற்ற இதயத் துடிப்பு மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் உள்ளிட்ட கடுமையான சிக்கல்களுக்கு ஆளாகும் சூழல் ஏற்படுகிறது என்று அவர் கூறினார்.

அந்நோயாளிகளில் பாதி பேர் தங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதை அறிந்திருக்கவில்லை என்று தேசிய சுகாதார மற்றும் நோயுற்ற ஆய்வு மையம் மற்றும் உலக சுகாதார அமைப்பு  கடந்த 2019 ஆம் ஆண்டில் மதிப்பிட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இதன் அடிப்படையில்,  'உங்கள் இரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவிடுங்கள், அதைக் கட்டுப்படுத்துங்கள், நீண்ட காலம் வாழுங்கள்' என்ற கருப்பொருளிலான 2022 ஆம் ஆண்டு உலக உயர் இரத்த அழுத்த தினம், சமூகத்தில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மக்களிடையே சுகாதார பரிசோதனை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் முயற்சியாக சுகாதார அமைச்சு  பல்வேறு அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து, ஜூலை மாதம் தொடங்கி தேசிய சுகாதாரப் பரிசோதனைத் திட்டத்தை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும்  டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

அமைச்சின் இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அதிகளவில் சுகாதார பரிசோதனை செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதன் வழி தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னதாகவே மேற்கொள்ள முடியும் என்றார் அவர்.

தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் வீதம் வாரத்தில் ஐந்து நாட்கள் மிதமான அளவில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி ஆரோக்கியத்தைப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.