ALAM SEKITAR & CUACA

வறட்சி காலத்தில் தீ ஏற்படும் இடங்களை தீயணைப்புத் துறை அடையாளம் கண்டுள்ளது

17 மே 2022, 7:36 AM
வறட்சி காலத்தில் தீ ஏற்படும் இடங்களை தீயணைப்புத் துறை அடையாளம் கண்டுள்ளது

கோலாலம்பூர், மே 17- வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் வறட்சி மற்றும் வெப்ப காலத்தின் போது தீச்சம்பவங்கள் ஏற்படும் என கருதப்படும் இடங்களை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அடையாளம் கண்டுள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள அந்த வெப்பத் திட்டுப் பகுதிகளை தமது துறை கண்காணித்து வருவதோடு ஆள்பல மற்றும் தளவாட ரீதியில் முழு தயார் நிலையிலும் உள்ளதாக அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது ஹம்டான் வாஹிட் கூறினார்.

சிலாங்கூரில் பந்திங், சிப்பாங், ஜோஹான் செத்தியா பகுதிகளும் சரவாவில் மிரி மற்றும் மத்திய பகுதியும் சபாவின் தென் பகுதியும் தீ விபத்து ஏற்படும் சாத்தியம் அதிகம் உள்ளவை என அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்களையும் தளவாடங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளோம் என்று  கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் ஏற்பாட்டில் நேற்றிரவு நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம்  அவர் தெரிவித்தார்.

காட்டுத் தீ மற்றும் கட்டமைப்புத் தீச்சம்பவங்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக தமது துறை  மலேசிய வானிலை ஆய்வுத் துறை உள்ளிட்ட துறைகளுடன் அணுக்கமான ஒத்துழைப்பை நல்கும் என்றும் அவர் சொன்னார்.

கடந்த சனிக்கிழமை தொடங்கிய தென்மேற்கு பருவமழை வரும் செப்டம்பர் மாத மத்திய பகுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியிருந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.