ஷா ஆலம், மே 5 : ரோடா டாருள் ஏசான் (ரைட்) திட்டத்தின் வழி வரும் ஜூலை மாதம் சிலாங்கூரில் பி-ஹெய்லிங் எனப்படும் மோட்டார் சைக்கிளில் உணவு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 3,800 பேர் பயனடைவர்.
அவர்களுக்கு மோட்டார் சைக்கிள் லைசென்ஸ், பயிற்சி மற்றும் சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவன காப்பீடு ஆகிய அனுகூலங்கள் வழங்கப்படும் என்று இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பு மிக முக்கியமானதாக விளங்குவதால் அவர்கள் சொக்சோ மூலமாக அல்லது இதர வழிகளில் காப்புறுதி பெற்றுள்ளதை தாங்கள் உறுதி செய்ய விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது உணவு விநியோகிக்கும் தொழில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பிரத்தியேக சட்ட அமலாக்கம் கிடையாது. பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத சாலையோர வணிகர்களின் நிலையில்தான் இவர்களும் உள்ளனர் என்றார் அவர்.
மோட்டார் சைக்கிளில் உணவு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் விபத்துகளில் சிக்கும் அபாயத்தை தவிர்ப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு பல கட்டப் பயிற்சிகள் வழங்கப்படும் என்று கைருடின் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி கூறியிருந்தார்.
உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து ரைட் திட்டத்தை தொடர்வதற்கு மாநில அரசு 2022 வரவு செலவுத் திட்டத்தில் 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.


