ECONOMY

பினாங்கில் பகடிவதை புகார்-  5 மருத்துவர்களின் பெயர்கள் சுகாதார அமைச்சிடம் சமர்ப்பிப்பு

11 மே 2022, 6:31 AM
பினாங்கில் பகடிவதை புகார்-  5 மருத்துவர்களின் பெயர்கள் சுகாதார அமைச்சிடம் சமர்ப்பிப்பு

ஜோர்ஜ் டவுன், மே 11- பகடிவதையில் ஈடுபட்டதாக கூறப்படும் பினாங்கு மருத்துவமனையைச் சேர்ந்த ஐந்து மருத்துவர்களின் பெயர்களை வேளாண் தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் நோர்லீலா அரிபின் சுகாதார அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளார்.

பினாங்கு மருத்துவமனையில் பகடிவதையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஐந்து மருத்துவர்களின் பெயர் மற்றும் அவர்கள் பணியாற்றும் துறை பற்றிய விபரங்களை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். இவ்விவகாரம் குறித்து அவரும் எனக்கு பதிலளித்துள்ளார் என்று அவர் சொன்னார்.

எனினும், பினாங்கு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் ஒருவர் அண்மையில் உயிரிழந்த சம்பவத்திற்கும் அமைச்சிடம் பெயர் குறிப்பிடப்பட்ட அந்த ஐந்து மருத்துவர்களுக்கும் தொடர்பில்லை என்றும் அவர் கூறினார்.

அந்த ஐவரின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டதற்கும் பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் தொடர்பில்லை. காரணம் இவ்விவகாரம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மற்ற மாநிலங்களிலுள்ள சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்களும் இதோ போல் மருத்துவர்களின் பெயர்களை அமைச்சிடம் அனுப்பியுள்ளதாக அறிகிறேன். அதன் அடிப்படையில் நானும் அந்த ஐவரின் பெயர்களை அமைச்சின் கவனத்திற்கு கொண்டுச் சென்றேன் என்றார் அவர்.

கடந்த மாதம் 17 ஆம் தேதி மருத்துவமனைக்கு அருகிலுள்ள கட்டிடத்திலிருந்து குதித்ததாக நம்பப்படும் 25 வயது பயிற்சி மருத்துவர் கடும் காயங்களுக்குள்ளாகி உயிரிழந்தார்.

அந்த மருத்துவரின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக சுயேச்சை பணிக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று கைரி இம்மாதம் 6 ஆம் தேதி கூறியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.