ECONOMY

ஷா ஆலம் மாநகர் மன்ற ஏற்பாட்டில் புகைப்படப் போட்டி- வெ.28,000 வெல்ல வாய்ப்பு

10 மே 2022, 7:10 AM
ஷா ஆலம் மாநகர் மன்ற ஏற்பாட்டில் புகைப்படப் போட்டி- வெ.28,000 வெல்ல வாய்ப்பு

ஷா ஆலம், மே 10- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் 2022 ஆம்  ஆண்டிற்கான புகைப்படப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு  28,000 வெள்ளி ரொக்கப் பரிசை தட்டிச் செல்வதற்குரிய வாய்ப்பு உள்ளது.

கடந்த மார்ச் 15 ஆம் தேதி முதல் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புகைப்படப் போட்டியில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கு பெறலாம் என்று ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

ஷா ஆலம் வட்டார மக்கள் தங்களிடமுள்ள புகைப்பட ஆற்றலை வெளிப்படுத்துவதற்கும் ஷா ஆலம் மாநகரின் அழகிய இடங்களை பிரபலப்படுத்துவதற்கும் ஏதுவாக இப்போட்டி நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.

இப்போட்டியில் பங்கு கொள்வோர் ஷா ஆலம் மாநகரில் உள்ள சுற்றுலா மையங்கள், கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள், ஏரி பூங்கா அல்லது இயற்கை அழகு நிறைந்த பகுதிகளை படம் பிடிக்கலாம்.

இந்த போட்டி கட்டிடங்கள் அல்லது அடையாளம் சின்னங்கள், இயற்கை அழகு,  வாழ்க்கைச் சூழல் மற்றும் இரவு நேரக் காட்சி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்று இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இப்போட்டியில் வெற்றியாளர்களை நிர்ணயிப்பதில் கருப்பொருள், படைப்பாற்றல், ஆக்கத்திறன், புகைப்படம் எடுப்பதில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் ஆகிய நான்கு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும் என்றார் அவர்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தைப் பிடிப்பவருக்கு  3,000 வெள்ளியும் இரண்டாம் வெற்றியாளருக்கு 2,000 வெள்ளியும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு 1,000 வெள்ளியும் அடுத்த நிலையில் வரும் 5 போட்டியாளர்களுக்கு தலா 200 வெள்ளி மற்றும் சான்றிதழும் வழங்கப்படும் என்று ஷாரின் சொன்னார்.

இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் www.mbsa.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக விண்ணப்ப பாரத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.