கோலாலம்பூர், ஏப் 30 - ஆஸ்திரேலியாவில் இல்லாத வேலைகளை வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் உட்பட 9 பேர் கடந்த புதன்கிழமை கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்ட இருவேறு சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டனர்.
இருபது முதல் 31 வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும் கடந்த மார்ச் 2020 முதல் செயல்படும் அழைப்பு மையத்தில் பணிபுரிந்து வந்ததாக நம்பப்படுகிறது என்று புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ கமாருடின் முகமது டின் கூறினார்.
அக்கும்பல் https:///www.facebook.com/ecotravelmalaysia மற்றும் https://www.facebook.com/malaysiaecotravel ஆகிய வாட்ஸ்அப் புலனம், முகநூல், மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வேலை வாய்ப்பு விளம்பரம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த வேலை வாய்ப்புகள் குறித்து சந்தேகப்படாதவர்கள் வெளிநாட்டில் வேலை விசாவிற்கு விண்ணப்பிக்க வழிகாட்டுவதற்கு https.www.malaysia-ecotravel.com/ இணையதளத்தையும் அக்கும்பல் பயன்படுத்தியதாக கமருடின் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களிடம் நிர்வாகச் செலவுகளுக்கு (விசா விண்ணப்பம்) 420 ஆஸ்திரேலியா டாலர் (1,400 மலேசிய ரிங்கிட்) வசூலிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இம்மியாக் கணக்கின் இணைய விண்ணப்பத்தில் உள்ள பதிவின் அடிப்படையில், இக்கும்பலின் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி வங்காளதேசம், மலேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 658 பேர் செய்து கொண்ட விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளது என்றார் அவர்.


