கோலாலம்பூர், ஏப் 29- எண்டமிக் கட்ட நகர்வில் கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்கான சிகிச்சை மையமாக மீண்டும் செயல்பட சுங்கை பூலோ மருத்துவமனைக்கு சுகாதார அமைச்சு அனுமதியளித்துள்ளது.
நாட்டில் நடப்பு கோவிட்-19 நிலவரங்களைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது மற்றும் நாட்டில் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கான கட்டில்களின் பயன்பாடு குறைவாக உள்ளது ஆகிய அம்சங்கள் இவ்விவகாரத்தில் கருத்தில் கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
இனி இந்த மருத்துவமனை முன்பு போல் ஹைப்ரிட் முறையில் அதாவது கோவிட்-19 மற்றும் கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் என்றார் அவர்.
ஆயினும், கோவிட்-19 தொடர்பான சம்பவங்களைத் தாங்கள் அணுக்கமாக கண்காணித்து வரும் வேளையில் நாட்டில் கோவிட்-19 சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் உரிய சிகிச்சையை அளிப்பதற்குரிய தயார் நிலையில் இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2020 மார்ச் 10 ஆம் தேதி, கோவிட்-19 நோயாளிகளுக்கான பிரத்தியேக சிகிச்சை மையமாக சுங்கை பூலோ மருத்துவமனை ஆர்ஜிதம் செய்யப்பட்டது.
நோய் உச்சத்தில் இருந்த போது ஒரு சமயத்தில் 2,000 கோவிட்-19 நோயாளிகள் வரை இங்கு சிகிச்சைப் பெற்றனர். நேற்று வரை மொத்தம் 92,874 கோவிட்-19 நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.


