கோலாலம்பூர், ஏப் 29- நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய தீவிரவாத கும்பல்களின் வலையில் இளம் தலைமுறையினர் சிக்கிக் கொள்ளாமலிருப்பதை உறுதி செய்வதில் காவல் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் சமூக ஊடகங்களை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்காக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் சம்பந்தப்பட்டத் தரப்பினர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குரிய அபாயம் உள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் முதன்மை உதவி இயக்குநர் டி.சி.பி. நோர்மா இஷாக் கூறினார்.
இளையோர் தீவிரவாத கும்பல்களுடன் இணைவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை அணுகும் ஆக்ககரமான நடவடிக்கையை காவல் துறை எடுத்து வருகிறது என்று அவர் சொன்னார்.
மலேசியாவைப் பொறுத்தவரை தீவிரவாதப் போக்குடன் செயல்படுவது குற்றமல்ல. ஆனால், இதுவே தீவிரவாதியாக மாறுவதற்கான தொடக்கப் புள்ளியாக மாறும். இத்தகைய பிரச்னைகளை முன்கூட்டியே தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்தாண்டில் சிலர் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளையும் இவ்வாண்டில் இருவர் சம்பந்தப்பட்ட நடவடிக்கையையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அவர்கள் அனைவரும் 20 வயது மதிக்கத்தக்கவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


