புக்கிட் மெர்தாஜம், ஏப் 29- இம்மாதம் 20 ஆம் தேதி சுங்கை பாக்காப் குடிநுழைவுத் துறை தடுப்புக் காவல் முகாமிலிருந்து தப்பி இன்னும் தலைமறைவாக இருந்து வரும் 61 ரோஹிங்கியா அகதிகளின் பெயர் மற்றும் புகைப்படங்களை போலீசார் வெளியிடவுள்ளனர்.
தப்பியோடியவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுவதற்கு ஏதுவாக அவர்கள் குறித்த விபரங்கள் மற்றும் படங்களை தயார் செய்யும் பணியில் தமது தரப்பு ஈடுபட்டு வருவதாக கெடா மாநில போலீஸ் தலைவர் ஆணையர் வான் ஹசான் வான் அகமது கூறினார்.
கைது நடவடிக்கையின் போது பிடிபடுவோரில் தப்பியோடிய கைதிகளும் உள்ளனரா என்பதை அடையாளம் காண்பதற்கு இந்த படங்கள் துணை புரியும் என்று அவர் சொன்னார்.
தப்பியோடியவர்களின் படங்களை வெளியிடாவிட்டால் இதர அமலாக்க அதிகாரிகளால் அவர்களை அடையாளம் காண முடியாமல் போய்விடும். புகைப்படங்கள் இருக்கும் பட்சத்தில் சிலாங்கூர், கோலாலம்பூர் அல்லது வேறு மாநிலங்களில் பிடிபடுவோரில் தேடப்படும் கைதிகளும் உள்ளனரா என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்றார் அவர்.
தப்பியோடிய கைதிகளில் பெரும்பாலோர் நாட்டைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் என நம்பப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இன்னும் தலைமறைவாக இருக்கும் 61 கைதிகளில் 50 பேர் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை இந்நாட்டில் தங்கியுள்ளனர். ஆகவே, அமலாக்கத் தரப்பினரின் பிடியிலிருந்து எவ்வாறு தப்புவது என்பதை அவர்கள் நன்கு அறிந்துள்ளதாக நம்பப்படுகிறது.


