அலோர்ஸ்டார், ஏப் 29- ஜாலான் சுங்கை பட்டாணியில் இரு சகோதரர்கள் சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பில் கணவன்-மனைவியை போலீசார் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர்.
அந்த சிறார்களின் வளர்ப்புத் தந்தை நேற்று மாலை 3.30 மணியளவில் ஜாலான் சுங்கை பட்டாணியிலுள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்ட வேளையில் 31 வயதுடைய அவர்களின் தாயார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஜாலான் கோலாம் ஆயர் பகுதியில் பிடிபட்டதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது சுக்ரி மாட் ஆகிர் கூறினார்.
அச்சிறார்கள் சித்திரவதை செய்யப்பட்டதில் அவரின் தாயாருக்கும் பங்கு உள்ளதா என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். அந்த தம்பதியரை விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைத்துள்ளோம் என அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
தனது வளர்ப்பு பிள்ளைகள் இருவரை சித்திரவதை செய்த குற்றத்தின் பேரில் 33 வயதுடைய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன. அந்த நபர் போதைப் பித்தர் என்பது அவர் மீது மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் தெரியவந்துள்ளது.
அவ்விரு சிறார்களும் இங்குள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில் முதலாம் மற்றும் மூன்றாம் ஆண்டில் பயின்று வருகின்றனர்.


