கோலாலம்பூர், ஏப் 29- சுங்கை பாக்காப் குடிநுழைவுத் துறையின் தடுப்புக் காவல் முகாமிலிருந்து கடந்த 20 ஆம் தேதி தப்பியோடிய ரோஹிங்கியா கைதிகள் செலாயாங் பாசார் போரோங்கில் உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அந்த மொத்த விலைச் சந்தை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொள்ளவுள்ளனர்.
இன்னும் தலைமறைவாக இருக்கும் அந்த கள்ளக் குடியேறிகளைக் கைது செய்வதில் குடிநுழைவுத் துறைக்கு தாங்கள் உதவத் தயாராக உள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மி அபு பாக்கார் கூறினார்.
இன்னும் பிடிபடாமலிருக்கும் அல்லது சரணடையாமலிருக்கும் எஞ்சிய கைதிகளை தேடும் நடவடிக்கையில் நாங்கள் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறோம். இந்நோக்கத்தின் அடிப்படையில் செலாயாங் பாசார் போரோங் மற்றும் சுற்றுவட்டாரங்களில் சோதனை மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார் அவர்.
கோலாலம்பூர் நிலையிலான ஓப்ஸ் செலாமாட் 18/2022 சாலை பாதுகாப்பு இயக்கத்தை இங்குள்ள துன் எச் எஸ்.லீ போக்குவரத்து போலீஸ் தலைமையகத்தில் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சுங்கை பாக்காப் குடிநுழைவுத் துறை முகாமிலிந்து தப்பிய ரோஹிங்கியா கைதிகள் செலாயாங் பகுதியில் மறைந்திருப்பதற்கான சாத்தியத்தை மறுப்பதிற்கில்லை என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருள் ஸைமி டாவுட் கூறியிருந்தது தொடர்பில் டத்தோ அஸ்மி இவ்வாறு கருத்துரைத்தார்.


