ஷா ஆலம், ஏப் 29- சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை உணவுப் பாதுகாப்பு மற்றும் தனிப்பிரிவின் வாயிலாக மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் காலாவதியான மற்றும் கெட்டுப் போன 1,400 உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட அந்நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருள்களின் மதிப்பு 12,413.77 வெள்ளியாகும் என்று மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙகாடிமான் கூறினார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் பேரங்காடிகள், மினி மார்க்கெட்டுகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட 42 வர்த்தக மையங்களில் உள்ள 9,681 பொருள்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருள்களில் 841 பயன்படுத்துவதற்கான தேதி காலாவதியானவையாகும். எஞ்சிய 566 பொருள்கள் கெட்டுப்போனவை அல்லது பொட்டலங்கள் கிழந்த நிலையில் காணப்பட்டவையாகும் என்றார் அவர்.
அந்த உணவுப் பொருள்கள் யாவும் 1983 ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் 4(8) பிரிவின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கெட்டுப்போன மற்றும் தேதி காலாவதியான பொருள்களை வாங்குவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக வாங்குவதற்கு முன் அப்பொருள்களை நன்கு சோதிக்கும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


