அலோர்ஸ்டார், ஏப் 29- மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் லங்காவியிலுள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் பயிலும் 13 நான்காம் படிவ மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இத்தாக்குதலில் தொடர்புடைய 12 மாணவர்கள் நேற்று பிற்பகல் 12.30 மணிக்கும் மற்றொரு மாணவர் மாலை 3.00 மணிக்கும் கைது செய்யப்பட்டதாக லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷரிமான் அஸ்ஹாரி கூறினார்.
கைதான மாணவர்களில் ஐவர் ஒரே வகுப்பையும் எஞ்சிய மாணவர்கள் மற்ற வகுப்புகளையும் சேர்ந்தவர்களாவர். விசாரணைக்காக அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
முன்னதாக 16 வயது மாணவர் ஒருவரை சக மாணவர்கள் தாக்கும் 25 வினாடி காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் காலை மணி 9.00 மணியளவில் நிகழ்ந்தது. மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இத்தாக்குதலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.


