கோல லங்காட், ஏப் 29- குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு உதவும் வகையில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ( பி.கே.பி.எஸ்.) மலிவு விற்பனைத் திட்டம் தொடரப்பட வேண்டும் என்று பொது மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நோன்புப் பெருநாள் சமயத்தில் கோழி, இறைச்சி போன்ற பொருள்கள் மலிவு விலையில் விற்கப்படுவது கண்டு தாம் மகிழ்ச்சியடைவதாக கர்மினா பாசார் ( வயது 60) கூறினார்.
இந்த வாய்ப்பை நான் நழுவவிடத் தயாராக இல்லை. கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த மலிவு விற்பனையில் கலந்து கொள்கிறேன் என்று அவர் சொன்னார்
முடிந்தால் மாதம் ஒரு முறை இந்த மலிவு விற்பனை நடத்தப்பட வேண்டும். பொருள்களின் விலை அபரிமிதமாக உயர்வு கண்டதால் பொது மக்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர் என்றார் அவர் குறிப்பிட்டார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு பத்து லாவுட்டில் நடைபெற்ற மக்கள் பரிவு விற்பனையின் போது சிலாங்கூர் கினியிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மற்றொரு வாடிக்கையாளரான ஹம்டான் மிஸ்ரான் கூறுகையில், சந்தையைவிட ஒரு மடங்கு குறைவான விலையில் இங்கு பொருள்கள் விற்கப்படுவதாக சொன்னார்.
எண்பது வெள்ளியில் கோழி,இறைச்சி, முட்டை, காய்கறிகள், சமையல் எண்ணெய் போன்றப் பொருள்களை இங்கு வாங்க முடிந்தது. மற்ற இடங்களில் இதில் பாதி பொருள்களை மட்டுமே வாங்க இயலும் என்றார் அவர்.


