ஷா ஆலம், ஏப் 28- பெருந்தொற்றுக்கு பிந்தைய சூழலில் பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையிலான மதிப்பீட்டு வரி உயர்வுக்கு மாநில அரசு ஒப்புதல் தராது.
அண்மையில் காஜாங் நகராண்மைக் கழகம் மேற்கொண்ட புதிய மதிப்பீட்டு ஆய்வு 1976 ஆம் ஆண்டு ஊராட்சி மன்ற (சட்டம் 171) சட்டத்திற்கேற்ப மேற்கொள்ளப்பட்டதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
எனினும், காஜாங்கில் மதிப்பீட்டு வரிக்கான புதிய மதிப்பீட்டு அமலாக்கம் குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. மாநில பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டுவதற்கு மாநில அரசு முன்னுரிமை அளிப்பதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
மாநிலத்தில் பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் ஆக்ககரமான முறையில் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதே மாநில அரசின் முக்கிய இலக்காக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
காஜாங் நகராண்மைக் கழகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்போதைய மதிப்பீடு 1985 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் அடிப்படையில் 37 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
காஜாங் நகராண்மைக் கழகத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களின் ஆட்சேபம் மற்றும் அதிருப்தியை ஊராட்சி மன்றம் கவனத்தில் கொள்ளும் என்று உறுதியளிக்கிறேன் என அறிக்கை ஒன்றில் இங் குறிப்பிட்டார்.
இந்த மறுமதிப்பீடு தொடர்பில் சொத்து உரிமையாளர்கள் தங்கள் ஆட்சேபத்தை எழுப்புவதற்கு ஏதுவாக உரிய வாய்ப்புகளை காஜாங் நகராண்மைக் கழகம் ஏற்படுத்தி தந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.


