ஷா ஆலம், ஏப் 27- நோன்புப் பெருநாளின் போது போக்குவரத்துக் குற்றங்களைப் புரியும் வாகனவோட்டிகள் தொடர்பான தகவல்களை போலீசாருக்கு தந்துதவுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்தகைய குற்றங்களை காணொளி அல்லது புகைப்படங்கள் வாயிலாக பதிவு செய்து போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையுடன் பகிர்ந்து கொள்ளும்படி தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.
இரட்டைக் கோடுகளில் முந்திச் செல்லாமலிருப்பது, அவசரத் தடத்தை தவறாக பயன்படுத்தாமலிருப்பது, போக்குவரத்துக் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தாமலிருப்பது போன்ற போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிப்பதன் மூலம் பொறுப்பான வாகனமோட்டியாக செயல்படுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, சாலைகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்வது மற்றும் குடியிருப்புகளில் உள்ள சொத்துகளைப் பாதுகாப்பது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் 18 வது ஓப்ஸ் செலாமாட் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
நோன்புப் பெருநாளின் போது பொது மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் போதும் பெருநாள் முடிந்து வீடு திரும்பும் போதும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு ஓப்ஸ் லஞ்சார் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


