கோலாலம்பூர் ஏப் 27- பொழுதுபோக்கு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையை டிக்டாக் செயலி வாயிலாக நேரடியாக பதிவேற்றம் செய்த போதைப் பொருள் தடுப்பு விசாரணைப் பிரிவைச் சேர்ந்த பெண் அதிகாரி வேறு துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றத்தை பெர்மானாவிடம் உறுதி செய்த தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோ ரஸாருடின் ஹூசேன், அப்பெண் அதிகாரி ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
அந்த சோதனை நடவடிக்கையை டிக்டாக் செயலி வாயிலாக நேரடி பதிவேற்றம் செய்த அப்பெண் அதிகாரியின் செயல் தனிப்பட்ட விஷயமாகும் என்பதோடு தனது டிக்டாக் செயலியை பிரபலப்படுத்தும் நோக்கிலானது என்று புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்புத் துறையின் இயக்குநர் டத்தோ ஆயோப் கான் மைடின் பிச்சை கடந்த திங்கள்கிழமை கூறியிருந்தார்.
உதவி சூப்ரிண்டெண்டன் பதவி வகிக்கும் அந்த பெண் அதிகாரி சோதனை நடவடிக்கையின் போது பயன்படுத்தப்படும் மேலங்கியை அணிந்த நிலையில் அந்த பொழுது போக்கு மையத்தில் நடத்தப்படும் சோதனை நடவடிக்கையின் பணித்தன்மை குறித்து விவரிக்கும் 38 விநாடி காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தது.


