கோலாலம்பூர், ஏப் 27- போக்குவரத்துக் குற்றப்பதிவுகள் மற்றும் கைது ஆணையைக் கொண்டிருக்கும் வாகனவோட்டிகளை அடையாளம் காண்பதற்காக நெடுஞ்சாலைகளில் வேகக் கட்டுப்பாட்டைக் கண்டறியும் “இன் கார் ராடார்“ மற்றும் ஐ.சி.ஒ.பி.எஸ். கருவிகளின் பயன்பாட்டை அரச மலேசிய போலீஸ் படை அதிகரிக்கவுள்ளது.
போக்குவரத்து குற்றப் பதிவுகளை கொண்ட மற்றும் போலி பதிவு எண்களைக் கொண்டிருக்கும் வாகனங்களை அடையாளம் காண்பதற்கு இந்த கருவிகள் பயன்படும் என்று தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோ ரசாருடின் ஹூசேன் கூறினார்.
இந்த கருவிகள் ஒரே இடத்தில் நிலையாகவும் இடமாற்றம் செய்யக்கூடிய வகையிலும் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
போக்குவரத்து குற்றப்பதிவுகளையும் கைது ஆணையையும் பெற்றவர்களை சாதாரண நாட்களில் அடையாளம் காண்பது கடினமானப் பணியாக உள்ளது. அதே சமயம், பெருநாள் காலத்தில் பெரும் எண்ணிக்கையில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் போது அத்தகையோரை அடையாளம் காண்பது எளிது என அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையின் போது குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பவர்கள் மற்றும் கைது ஆணை பெற்றவர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படுவார்கள். பின்னர் அவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு ஆவணப் பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்படுவர். அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக பிறகு நீதிமன்றம் வரும்படி அவர்களுக்கு உத்தரவிடப்படும் என அவர் மேலும் சொன்னார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு இங்குள்ள மெனாரா டி.எம்.மில் 18/2022 சாலைப் பாதுகாப்பு இயக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


