சுங்கை பூலோ, ஏப் 27- இங்குள்ள சவுஜானா உத்தாமாவில் தன்னார்வலர் தீயணைப்பு நிலையம் அமைக்க சிலாங்கூர் அரசு 50,000 வெள்ளியை வழங்கியுள்ளது.
மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதியாக அத சவுஜானா உத்தாமா விளங்குவதால் அங்கு தன்னார்வலர் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
இந்த தீயணைப்பு நிலையத் திட்டத்திற்காக ஈராண்டுகளில் பத்து லட்சம் வெள்ளியைத் திரட்ட நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். இத்திட்டத்தை அமல்படுத்துவதில் குடியிருப்பாளர் சங்கங்களும் இதர அமைப்பினரும் ஒத்துழைப்பு நல்குவர் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.
சவுஜானா உத்தாமா கிராம சமூக நிர்வாக மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்புத் துறப்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, சவுஜானா உத்தாமா தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் இடம் அவசர அழைப்புகளுக்கு உடனடி செல்லக்கூடிய அளவுக்கு வசதியான இடத்தில் உள்ளது என சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறினார்.
தற்போது சவுஜானா உத்தாமா சுற்று வட்டாரத்தில் தீயணைப்பு நிலையங்கள் இல்லாததால் இந்த தன்னார்வலர் தீயணைப்பு நிலையம் பெரிதும் பயனாக இருக்கும் என்று அவர் சொன்னார்.


