கோலாலம்பூர், ஏப் 26- நோன்புப் பெருநாள் உடைகள் மற்றும் இதர பொருள்கள் விற்பனை மோசடி தொடர்பில் போலீசார் 22 புகார்களைப் பெற்றுள்ளனர்.
இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் பதிவான இந்த மோசடி சம்பவங்களில் 19,773 வெள்ளி சம்பந்தப்பட்டுள்ளதாக வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ முகமது கமாருடின் முகமது டின் கூறினார்.
இந்த மோசடிக் கும்பல் நோன்புப் பெருநாள் ஆடைகள் மற்றும் பொருள்கள் தொடர்பான விளம்பரங்களைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்ததைத் தமது துறை கண்டறிந்ததாக அவர் சொன்னார்.
இணையம் வாயிலாகப் பணம் செலுத்தியவர்கள் தாங்கள் ஆர்டர் செய்த பொருள்கள் கிடைக்காது போனதால் ஏமாற்றமடைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஆடைகள் மற்றும் இதர பொருள்களுக்கு அதிகக் கிராக்கி உள்ளதை அறிந்த அந்த மோசடிக் கும்பல் இல்லாத பொருள்களை விற்பதாகக் கூறி விளம்பரம் செய்துள்ளது என்றார் அவர்.
சந்தேகத்திற்கிடமான விற்பனைத் தளங்களில் பொருள்களை வாங்குவதைத் தவிர்க்கும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


