கோலாலம்பூர், ஏப் 26- வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அடுத்த மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளிலும் நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் வாகனவோட்டிகள் முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளும்படி பிளஸ் மலேசியா பெர்ஹாட் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
சொந்த ஊர்களுக்குச் செல்லவும் பெருநாள் முடிந்து தலைநகர் திரும்பவும் இலவச டோல் கட்டணச் சலுகை வழங்கப்பட்ட நேரத்தைப் பயன்படுத்தப் பெரும்பாலான வாகனவோட்டிகள் விரும்புவர் என எதிர்பார்க்கப்படுவதாகப் பிளஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ அஸ்மான் இஸ்மாயில் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று அறிவித்த இலவச டோல் கட்டணச் சலுகையைக் காரணமாக நெடுஞ்சாலைகளில் வாகன எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியத்தைச் சமாளிக்கும் விதமாகப் பிளஸ் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகளிலும் நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்வு மையங்களிலும் பல்வேறு முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம் என்ற அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு மலேசியக் குடும்பத்திற்கு இலவச டோல் கட்டணச் சலுகை மற்றும் கட்டணக் கழிவை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளதாகப் பிரதமர் நேற்று கூறியிருந்தார்.
பிளஸ் நிறுவனம் நிர்வகித்து வரும் நெடுஞ்சாலைகளில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அடுத்த மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளிலும் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.


