கோலாலம்பூர், ஏப் 26- இங்குள்ள பேரங்காடி ஒன்றில் முகக் கவசம் அணியாததோடு அங்கிருந்த பாதுகாவலரிடம் ஆபாச சைகை காட்டிய குற்றத்திற்காக கனடிய ஆடவர் ஒருவருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 800 வெள்ளி அபராதம் விதித்தது.
திபெர்ஸ் டிவாவில் (வயது 44) என்ற அந்த ஆடவர் தமக்கெதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் எஸ்.மகேஸ்வரி இந்த தண்டனையை விதித்தார்.
முதலாவது குற்றச்சாட்டிற்கு 100 வெள்ளி அபராதமும் அபராதத்தை கட்டத் தவறினால் ஒரு நாள் சிறைத்தண்டனையும் இரண்டாவது குற்றச்சாட்டிற்கு 700 வெள்ளி அபராதமும் அபராதத்தைக் கட்டத் தவறினால் 15 நாள் சிறைத்தண்டனையும் விதிப்பதாக மாஜிஸ்திரேட் தனது தீர்ப்பில் கூறினார்.
கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் ஜாலான் அம்பாங்கில் உள்ள பேரங்காடி ஒன்றில் பாடாம் கிரி என்ற பாதுகாவலருக்கு சினத்தை ஏற்படுத்தும் வகையில் நடுவிரலை காட்டியதன் மூலம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக அவர் மீது முதலாவது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
பொது இடத்தில் முகக் கவசம் அணியத் தவறியதாக அவர் இரண்டாவது குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.


