கோலாலம்பூர், ஏப் 26- சுமார் 100,000 வெள்ளியைக் கேட்டுப் பெற்ற சந்தேகத்தின் பேரில் அரசு பணியாளர் ஒருவரை ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தது.
அண்மையில் ஜோகூரில் நடைபெற்ற தேர்தலின் போது வாக்குச் சாவடிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணியை மேற்கொள்ள சில நிறுவனங்களுக்கு குத்தகை வழங்கியதற்கு கைமாறாக கையூட்டை பெற்ற சந்தேகத்தின் பேரில் 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக வட்டாரம் ஒன்று கூறியது.
இதே போன்ற பணிக்காக ஆடவர் ஒருவரிடம் அந்த பணியாளர் 130,000 வெள்ளியைக் கேட்ட வேளையில் அவர் 100,000 வெள்ளியை மட்டுமே கொடுக்க முன்வந்ததாக நம்பப்படுகிறது.
அந்த அரசு பணியாளரும் அத்தொகையை பெற ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பணத்தைப் பெற்றுக் கொள்ள வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பி அரசு பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதை எம்.ஏ.சி.சி.யின் உளவுப் பிரிவு இயக்குநர் டத்தோ அஸ்மி கமாருள்ஸமான் உறுதிப்படுத்தினார்.
விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்நபர் 10,000 வெள்ளி ஜாமீனில் இன்று விடுவிக்கப்பட்டார்.


