கோலாலம்பூர், ஏப் 26- நாடு எண்டமிக் எனப்படும் குறுந்தொற்று கட்டத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாண்டு நோன்புப் பெருநாளின் போது வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என என அஞ்சப்படுகிறது.
கடந்த ஈராண்டுகளாக அமலில் இருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பெருநாள் காலத்தில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் குறைந்து காணப்பட்டதாக செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பே எங் லாய் கூறினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பெருநாள் காலத்தில் வீடு புகுந்து திருடும் சம்பவங்களின் எண்ணிக்கை 28 ஆக பதிவான நிலையில் கடந்த 2020 இல் 19 ஆகவும் கடந்தாண்டில் 14 ஆகவும் வீழ்ச்சி கண்டது என்றார் அவர்.
கடந்த ஈராண்டுகளாக பெருநாள் காலத்தின் போது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலையிலிருந்த மக்கள் இவ்வாண்டில் பெருநாளை குடும்பத்தினருடன் கொண்டாடச் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியிருப்பார்கள் இல்லாத வீடுகள் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்வது எங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது என்றார் அவர்.
பாதுகாப்பான வீடு எனும் இயக்கத்தின் வாயிலாக குற்றச்செயல் தடுப்பு நடவடிக்கைகளை காவல் துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருவர் என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
இந்த பாதுகாப்பான வீடு இயக்கத்தின் போது போலீசார் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்துப் பணியில் ஈடுபடுவர் என்று அவர் மேலும் சொன்னார்.


