ஷா ஆலம், ஏப் 26- ஜோகூர் மக்கள் மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரசித்தி பெற்ற தலைவராக விளங்குவது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஆய்வு நிறுவனமான எண்டவர் –எம்.ஜி.சி. மேற்கொண்ட அந்த கருத்துக் கணிப்பில் இதர கட்சிகளின் முக்கியத் தலைவர்களை காட்டிலும் அன்வார் அதிக செல்வாக்குமிக்கவராக விளங்குகிறார்.
இந்த கருத்துக் கணிப்பில் 21 விழுக்காடு அல்லது 1,068 வாக்குகள் பெற்று டத்தோஸ்ரீ அன்வார் முதலிடம் வகிக்கும் வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் 13 விழுக்காட்டு ஆதரவை மட்டுமே பெற்றுள்ளதாக தி வைப்ஸ் இணைய ஏடு கூறியது.
அன்வாருக்கு அடுத்த நிலையில் 18 விழுக்காட்டு ஆதரவுடன் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் 17 விழுக்காட்டு ஆதரவுடன் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேனும் உள்ளனர்.
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின், (14 விழுக்காடு) அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் (4 விழுக்காடு) பெஜூவாங் கட்சித் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது (3 விழுக்காடு) மற்றும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் (3 விழுக்காடு) ஆகியோர் அடுத்த நிலையில் உள்ளனர்.
மூடா கட்சியின் தலைவர் சைட் சடிக் அப்துல் ரஹ்மான் இரண்டு விழுக்காட்டு ஆதரவைப் பெற்றுள்ள வேளையில் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி மற்றும் பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கிற்கு ஒரு விழுக்காட்டு ஆதரவு கிடைத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பில் 55 விழுக்காட்டு மலாய்க்காரர்களும் 37 விழுக்காட்டுச் சீனர்களும் 7 விழுக்காட்டு இந்தியர்களும் ஒரு விழுக்காட்டு இதர இனத்தினரும் பங்கேற்றனர்.


