கிள்ளான், ஏப் 26- இவ்வாண்டு ஓப்ஸ் ஹரி ராயா சாலை பாதுகாப்பு இயக்கத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) அமலாக்க அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் 29 தொடங்கி மே 8 வரை மேற்கொள்ளப்படும் இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது பெருநாள் காலத்தில் விபத்துகளைக் குறைப்பதற்காக அமலாக்க மற்றும் அறிவுரை அணுகுமுறை கடைபிடிக்கப்படும் என்று ஜே.பி.ஜே. அமலாக்கத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ லோக்மான் ஜமான் கூறினார்.
சிலாங்கூரில் 300 ஜே.பி.ஜே. உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், எந்த ஒரு நேரத்திலும் 160 பேர் களப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.
அதிக விபத்துகள் நிகழும் இடங்கள், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகள், பஸ் நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் அந்த அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என அவர் மேலும் தெரிவித்தார்.
இது தவிர, மோட்டார் சைக்கிள் மூலம் ரோந்துப் பணியை மேற்கொள்ளும் அதே வேளையில் தற்காலிக பயண அனுமதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிய சாதாரண பயணிகள் போல் பஸ்களில் அதிகாரிகள் பயணம் மேற்கொள்வர் என்று அவர் சொன்னார்.
நேற்று, கிள்ளான் சென்ட்ரல் பஸ் நிலையத்தில் சானி எக்பிரஸ் பஸ் நிலையத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


