ஷா ஆலம், ஏப் 25- மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமது நஸ்லான் முகமது கசாலி சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலையீடு (எம்.ஏ.சி.சி.) நீதி பரிபாலன கோட்பாடுகளுக்கு முரணான செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
நீதிபதிகளின் உயர்நெறியைக் கண்காணிப்பதற்கும் அவர்களின் நடவடிக்கையை கட்டுபடுத்துவதற்கும் நீதித் துறையில் அமைப்பு ஒன்று உள்ளதாக அவர் சொன்னார். நடப்பு முறையில் அதிகாரப் பகிர்வு உள்ளதை உறுதி செய்யும் விதமாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ஆகவே, இவ்விவகாரத்தில் எம்.ஏ.சி.சி.யின் தலையீடு அந்த கோட்பாடுகளை மீறியச் செயலாக கருதப்படுகிறது. ஆட்சியாளர்கள் சரி செய்ய முன்வராத நிலையில் பல ஆண்டுகளாக சீர்கெட்டும் ஏற்றத் தாழ்வுடனும் செயல்பட்டு வந்த நீதித்துறைக்கு இப்போதுதான் உயர்நெறியும் சுதந்திரமும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் இந்நடவடிக்கை அரசியல் நெருக்குதல் மற்றும் தலையீட்டைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
முகமது நஸ்லான் வங்கிக் கணக்கில் 10 லட்சம் வெள்ளி இருந்தது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இணைய ஊடகம் ஒன்று இம்மாதம் 20 ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது.


