கோலாலம்பூர், ஏப் 25- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,006 ஆக க் குறைந்தது. நோய்த் தொற்று கண்டவர்களில் 32.15 விழுக்காட்டினர் முதலாம் கட்ட பாதிப்பையும் 67.25 விழுக்காட்டினர் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் கொண்டுள்ளனர்.
மேலும் 12 பேர் அல்லது 0.30 விழுக்காட்டினர் மூன்றாம் கட்டப் பாதிப்பைக் கொண்டுள்ள வேளையில் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை தலா அறுவர் அதாவது 0.15 விழுக்காட்டினர் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள 24 பேரில் ஐவர் தடுப்பூசியை முழுமையாக அல்லது அறவே பெறாதவர்கள் என்று அவர் சொன்னார்.
மேலும் ஒன்பது போர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் என்றும் எழுவர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 9 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்பதோடு 12 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றார் அவர்.
நேற்றைய புதிய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 லட்சத்து 31 ஆயிரத்து 073 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட ஒரு நோய்த் தொற்று மையத்துடன் சேர்த்து நாட்டில் தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 97 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்நோய்த் தொற்று காரணமாக நேற்று மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165 ஆகும். அவர்களில் 91 பேர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் 74 பேர் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் கொண்டுள்ளனர்.
இந்நோய்த் தொற்றிலிருந்து நேற்று 10,223 பேர் குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43 லட்சத்து 20 ஆயிரத்து 822 ஆக உயர்ந்துள்ளது.


