ஷா ஆலம், ஏப் 25 - தலைநகர் சிராஸ், தாமான் மூடாவில் உள்ள பம்ப் ஹவுஸ் நீர் அழுத்த மையத்தில் ஏற்பட்ட குழாய் உடைப்பைச் சரி செய்யும் பணிகள் காரணமாக உண்டான நீர் விநியோகத் தடை இன்று காலை 9.00 மணியளவில் முழுமையாகச் சீரடைந்தது.
இந்த திட்டமிடப்படாத நீர் விநியோக இடையூறு காலத்தில் பொறுமை காத்ததோடு ஒத்துழைப்பும் வழங்கிய வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.
நேற்று மாலை 3.00 மணிக்கு தொடங்கப்பட்ட அவசர பழுதுபார்ப்பு பணிகள் இன்று அதிகாலை 3.00 மணிக்கு முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் நேற்று கூறியிருந்தது.
இன்று அதிகாலை 2.00 மணிக்கு பழுதுபார்க்கும் பணிகள் முற்றுப் பெற்ற நிலையில் நீர் விநியோகம் கட்டம் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இன்று மாலை 4.00 மணிக்குள் பாதிக்கப்பட்ட அனைத்து 15 பகுதிகளிலும் நீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பும் என அந்நிறுவனம் இன்று காலை தெரிவித்தது..
மேல் விபரங்களுக்கு www.airselangor.com அகப்பக்கம், ஆயர் சிலாங்கூர் மொபைல் செயலி, பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இண்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் சமூக ஊடகங்களை வலம் வரலாம். அல்லது ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தொடர்பு மையத்தை 15300 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


